தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பிரிவு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒப்பந்த முறையில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாகவும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தால் ஆசிரியர்கள் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த ஆசிரியர்களான இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9 ஆயிரம் ரூபாயும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்ததன் அடிப்படையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலப்பிரிவு துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய 221 ஆசிரியர்களுக்கும் புதிதாக நிரப்பப்பட இருக்கும் 194 பணியிடங்களுக்கு சேர்த்து மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என பழங்குடியின நலப்பிரிவு இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட இருப்பதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலவாரியம் தெரிவித்துள்ளது.