ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய பால புரஸ்கார் விருது மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருது எனச் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன்படி தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட 23 இந்திய மொழிகளில் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான (2024) விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் மொழியில் வெளியான படைப்புகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று சால்ட் பதிப்பகம் வெளியிட்ட ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு எழுத்தாளர்களுக்கும் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பால புரஸ்கார் விருதுக்கும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது! வாழ்த்துகள்!. காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புராஸ்கார் விருதுக்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் மூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட காலமாகத் தமிழ் நவீன இலக்கியத்தில் இயங்கிவருபவர் யூமா வாசுகி. அடிப்படையில் ஓவியராக இருந்து இவர் இயற்றிய கவிதைகளும், எழுதிய நாவல்களும் தமிழ்ப் பரப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றவை. மலையாளத்திலிருந்து சிறார் கதைகளை மொழிபெயர்த்துவந்த இவர், தனது நேரடி சிறுவர் கதைக்கொத்தான ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்கு, சாகித்ய அகாடெமியின் பால புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். இவருக்கும், ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கும் இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார்.