விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த பேரணிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் போலீசாரும் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே, அதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ, ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்திருப்பது அதிமுக கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து அதிமுக கட்சியில் பொறுப்பு வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட் திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ, தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி சென்று விட்டு தமிழகம் திரும்பிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'அரசியல் ரீதியாக டெல்லி செல்லவில்லை தனிப்பட்ட பயணமாக தான் டெல்லி சென்று வந்துள்ளேன். ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் வாயிலாக தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். ஹரியானாவில் ஆளுங்கட்சியாக பாஜக வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக வந்திருக்கிறது. அதுவும் ஒரு வகையில் வெற்றி தான். தளவாய் சுந்தரம் ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கி வைத்தது அவருடைய தனிப்பட்ட உரிமை. அதை அவர் தான் விளக்க வேண்டும். ஆனால் அதற்காக பதவி நீக்கம் செய்தது தவறு. அதிமுகவிலிருந்து வேறு அமைப்புடைய நிகழ்ச்சியை துவக்கி வைக்கக் கூடாது என்ற சட்டம் அதிமுகவில் இல்லை' என்றார்.