கேரளாவில் பிரசித்தி பெற்ற மிக முக்கிய கோவில் சபரிமலை ஐய்யப்பசாமி கோவில். இங்கு கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கா்நாடகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஆண்டுத்தோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல மகர கால பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 16-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. அன்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருமுடி கட்டி ஐய்யப்பசாமியை தரிசித்து வருகின்றனா். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நேற்று 27-ம் தேதி நிறைவடைந்தது. இதை காண நேற்று சுமார் ஒரு லட்சம் பக்தா்கள் நேற்று குவிந்தனா்.
இது குறித்து திருவிதாங்கூா் தேவசம் போர்டு தலைவா் வாசு கூறும் போது, "இந்த ஆண்டு மண்டல பூஜை எந்தவித அசம்பாவிதங்களும், பிரச்சினைகளும், புகார்களும் இன்றி அமைதியாக நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தா்களின் வருகையும் வருமானமும் அதிகரித்துள்ளது.
மண்டல பூஜைக்காக கடந்த 39 நாட்களில் ரூ.156 கோடியே 60 லட்சம் வருமானம் வந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 51 கோடி அதிகமாகும். இதில் அரவணை மூலம் ரூ. 67 கோடியே 76 லட்சமும், அப்பம் மூலம் ரூ. 9 கோடியே 86 லட்சமும், பக்தா்களின் காணிக்கை மூலம் ரூ.53 கோடியே 14 லட்சமும் கிடைத்துள்ளது.
இதை தொடா்ந்து மகர கால பூஜைக்காக மீண்டும் வருகிற 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். இதற்காக அன்று மதியத்தில் இருந்து பக்தா்கள் பம்பையில் இருந்து மலையேற அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.