The ruling party is responsible for the corruption of officials ...! - eswaran

"பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அந்த முறைகேட்டில் ஈடுபட அழுத்தம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Advertisment

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் கட்சியினரின் ஊழல் வகைகளையும் பட்டியலிட்டுள்ளார். அதில், "விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயி அல்லாதோருக்கு உதவித்தொகை வழங்கி அரசின் திட்டத்தை கேலிக்கூத்தாக மாற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்கின்ற கட்சியைச் சார்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறக் கூடிய பயனாளிகளின் பட்டியலை தயார் செய்து கொண்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். அதை வைத்துகொண்டு அரசியல் ஆதாயம் தேடியதும் உண்மை.

Advertisment

இது அரசினுடைய திட்டம் என்ற நிலையில் நிற்காமல் ஆளுங்கட்சியினுடைய திட்டம் போல பிரச்சாரம் செய்ததையும் அறிவோம். அரசியல் பிரமுகர்களுடைய அழுத்தத்தின் காரணமாகவே போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதன்மூலம் லாபமடைந்த அரசு அதிகார மையங்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைநிலை வரை சென்று சேருவதற்கு முக்கிய பங்காற்றுவது அரசு அதிகாரிகள்தான். அப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் தவறு செய்யும்போது அது மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் திட்டத்தில் இப்படியொரு மோசடி நடந்திருப்பது வேதனையளிக்கிறது.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். ஆனால் அந்த முதுகெலும்பையே அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் பதவியைப் பயன்படுத்தி முறித்திருக்கிறார்கள். இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தில் மட்டுமல்லாமல் அரசு அறிவிக்கின்ற அனைத்துத்திட்டங்களிலுமே ஆளுங்கட்சியினரின் முறைகேடு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

Ad

1.ஆடு வழங்கும் திட்டத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்குவது.

2.பசுமை வீடு திட்டத்தில் ஆளுங்கட்சியினர் லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் ஒதுக்குகிறார்கள்.

3.ஒப்பந்தங்கள் ஆளுங்கட்சியினர் பெறவேண்டியதை பெற்றுக்கொண்டுதான் ஒதுக்குகிறார்கள். இ-டெண்டர் மூலம் நேர்மையாக நடைபெறுகிறது என்பதெல்லாம் வேஷம்.

4.தமிழகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான தூய்மைப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இதில் 75 சதவீதம் போலி. இதன் மூலம் வரும் சம்பளப்பணம் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு கைமாறுகிறது. வங்கிக் கணக்குகளும், விலாசங்களும் ஆய்வு செய்யப்பட்டால் 1,000 கோடிக்கு மேல் போலிகள் வெளிவரும். இதேபோலத்தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் நடக்கிறது.

5.கூட்டுறவு சங்கத்தில் கொடுக்கப்படும் பயிர்க்கடன் மற்றும் சொட்டுநீர் பாசன திட்டத்திலும் இதேபோன்ற முறைகேடுகள்.

6.வயதானவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியத்திலும் முறைகேடுகள் அரங்கேறுகின்றன.

7.குடிசை மாற்று வாரிய பயனாளிகளை தேர்ந்தெடுப்பதிலும் உழவர் உதவித்திட்டம் போலத்தான். அந்த வீடுகள் வாடகைக்கு விடப்படுவதற்கான காரணங்களும் அதுதான்.

8.பேருந்து நிலையங்கள் போன்று பொது இடங்களில் கடைகள் ஒதுக்கப்படுவதும் இப்படித்தான்.

Nakkheeran

மொத்தத்தில் அரசின் திட்டங்களில் மோசடிகளும், ஊழல்களும் நிறைந்ததாக மாறியிருக்கிறது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும் 50 சதவீத பயனாளிகளுக்கு கூட சென்றுசேர்வது கிடையாது. எனவே அரசின் திட்டங்கள் அனைத்தும் சரியானவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்பதை மத்திய, மாநில அரசுகள் குழு அமைத்து ஆய்வு செய்து உறுதிப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளையும், ஊழல்களையும் தடுக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.