ஆன்மிக நம்பிக்கையைப் பொறுத்தவரை, சாமானியர்களும் அரசியல் தலைவர்களும் மலையளவுக்கு வேறுபடுகின்றனர். ‘கோவிலுக்கு போனோம்; சாமி கும்பிட்டோம்..’ என்ற மனநிறைவு சாமானியர்களுக்கு மட்டுமே உண்டு. அரசியல் தலைவர்களோ, ‘நாம் சிறப்பானவர்கள்.. வழிபாடும் வெகு சிறப்பாக இருக்கவேண்டும்…’ என்ற எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர். இது, 1992-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவிலும் நிரூபணமாயிற்று.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று இறைவன் வீதி உலா வந்து மக்களை ஆசீர்வதிக்கிறார் என்றும், சுவாமி நீராடும்போதே பக்தர்களும் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் நம்பப்படுகிறது. இதனை தீர்த்தவாரி என்றழைக்கின்றனர். இவ்வாறு புனித நீராடுவது, பல ஜென்ம பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம். ‘பாவங்கள் போய்விடுமென்றால் நல்லதுதானே!’ என, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கும், அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலாவுக்கும் தோன்ற, அதிகாரத்தில் இருப்பதால், ‘ரத கஜ துரக பதாதிகள்’ என மன்னர் காலத்தில் சொல்வார்களே, அதுபோல், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய, இருவரும் கும்பகோணம் சென்று, திருக்குளக்கரையில் அமர்ந்து, புனித நீராடலில் ஈடுபட்டனர். அதாவது, நீரை மொண்டுமொண்டு, ஒருவர் தலையில் ஒருவர் ஊற்றினர். இவ்விருவர் பாதுகாப்பில் மட்டுமே காவல்துறை அக்கறை காட்டியதால், அப்போது நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 60 பேரின் உயிர் பறிபோனது.
ஆன்மிக ஈடுபாட்டில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சளைத்தவர்கள் அல்ல, ஆளும்கட்சியின் இன்றைய அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும். பாமர மக்களால் கோவிலுக்குத்தான் போகமுடியும். அமைச்சரென்றால், பழைய கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகமே நடத்தமுடியும். அப்படித்தான், விருதுநகர் அருகிலுள்ள மூளிப்பட்டியில், தனது குலதெய்வமான தவசிலிங்கத்துக்கு கோவில் எழுப்பி, கும்பாபிஷேகமும் நடத்தினார், தமிழக பால்வளத்துறை அமைச்சரான, கே.டி.ராஜேந்திரபாலாஜி.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் ஆகாது. ’ராஜவர்மனை எம்.எல்.ஏ. ஆக்கியதுதான், என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு..’ என்று வெளிப்படையாகவே கூறிவருகிறார், ராஜேந்திரபாலாஜி. விடாக்கண்டனான ராஜவர்மனும், தனக்குப் பின்னால் உள்ள கட்சி நிர்வாகிகள் மூலம், அமைச்சருக்கு எதிராக புகாரெல்லாம் கொடுத்து ஓய்ந்துபோனார். இந்த நிலையில்தான், திருநெல்வேலி மாவட்டம் - தாருகாபுரத்தில் உள்ள மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோவிலில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளோடு யாகம் நடத்தியிருக்கிறார், ராஜவர்மன்.
‘அந்த மத்தியஸ்தநாத சுவாமி கோவிலுக்கு அப்படியென்ன சிறப்பு?’ என்று கேட்டால், ‘திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பஞ்சபூத தலங்களில், மத்தியில் அமைந்துள்ள திருத்தலம் இது. ஒருகாலத்தில் எல்லைகளைப் பிரிப்பதில், சேர, சோழ, பாண்டியர்களுக்குள் தகராறு ஏற்பட, அகத்திய முனிவரிடம் முறையிட்டனர். அவர்களிடம் அகத்தியர் ‘உங்கள் பிரச்சினையை சிவபெருமான் தீர்த்துவைப்பார்..’ என்றாராம். நாதகிரி முனிவராக தாருகாபுரம் வனத்தில் வீற்றிருந்த சிவபெருமானிடம், அகத்தியர் கூறியபடி, மூவேந்தர்களும் பிரச்சனையை விவரிக்க, ’மத்தியஸ்தம்’ செய்து தீர்த்துவைத்து, மறைந்து விட்டாராம். மன்னர்களின் பிரச்சனையை தீர்த்ததாலேயே, ‘மத்தியஸ்தநாதர்’ எனப் பெயர் வந்ததாம். மனப்பிணக்கை இல்லாமல் பண்ணியதால், ‘பிணக்கறுத்த பெருவுடையார்’ என்ற பெயரும் இத்தலத்துக்கு வந்தது என்கிறார்கள், தலபுராணத்தை அறிந்தவர்கள்.
ராஜேந்திரபாலாஜிக்கும் ராஜவர்மனுக்குமிடையே உள்ள பிணக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். வரை தெரிந்ததுதான். ‘எதற்காக யாகம்?’ என்று எம்.எல்.ஏ. ராஜவர்மனிடமே கேட்டோம். ”வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டேன். தட்டாங்குளம் காளியம்மனை சிறப்பு தரிசனம் செய்தேன்.” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். ஏனோ, மத்தியஸ்தநாத கோவிலில் நடத்திய யாகம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை. ராஜேந்திரபாலாஜியும் ராஜவர்மனும் ஒன்றுசேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று பேசப்படும் நிலையில், இந்த யாகம் எதற்காகவோ?
உட்கட்சிப் பூசல் இல்லாத அரசியல் கட்சி எது? மன்னர் காலத்தில் ‘மத்தியஸ்தம்’ செய்த சிவபெருமான், அரசியல்வாதிகளுக்காக ‘இறங்கி’ வருவாரா? பிணக்கை தீர்ப்பாரா? நம்பிக்கைதானே வாழ்க்கை!