Skip to main content

நாகையில் முகாமிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்

Published on 25/09/2019 | Edited on 25/09/2019


நாகையில் காலாண்டு விடுமுறையை பயன்படுத்தி தனியார் பள்ளி ஒன்றில் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் துவங்கியிருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள குருஞானசம்பந்தம் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு பொதுமக்களும், சமுக ஆர்வளர்களும் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பயிற்சி வகுப்பு நடக்கும் பள்ளிக்கூடத்தில் கல்வீசி கலவரம் செய்ததாக சிலர் மீது வழக்கும் பதிவானது. ஆனாலும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி போலீஸாரின் பாதுகாப்போடு நடத்தி முடித்தனர்.

அந்த வகுப்பு முடிந்து மூன்று மாதங்களுக்குள் காலாண்டு விடுமுறையை பயன்படுத்தி நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் தஞ்சை கோட்ட பொறுப்பாளர் ஆறுமுகசாமி, கோட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நாகை அடுத்த வடகுடி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி மைதானத்தில் 24ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடைகளை அணிந்துகொண்டு நடைபெறும் முகாமில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த விவேக் என்பவர் செய்தியாளர்களை படம் பிடிக்க விடாமல் தகராறில் ஈடுபட்டதுடன் கேமராவையும் பிடுங்க முயற்சி செய்தார்.

"தனியார் பள்ளி வளாகத்தில் இன்றிலிருந்து 5 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு காவல்துறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக எந்த அனுமதியும் பெறவில்லை" என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்