அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை, தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்டம் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவாக விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
மேற்கண்ட விரிவான விசாரணையின் போது, அவர் 01/04/2015 முதல் 31/03/2022 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுய லாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூபாய் 58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.
இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப்பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018- ன் படி (1) காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர், (2) டாக்டர் M.K. இனியன், (3) டாக்டர் K.இன்பன், (4) R.சந்திரசேகரன், (5) B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் (6) S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07/07/2022 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கினைத் தொடர்ந்து, சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.