Skip to main content

10 வருட நண்பரை ஏமாற்றி ரூ.3 லட்சம் திருட்டு!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

Rs 3 lakh abduction by cheating 10 year friendship

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் என்.எல்.சி. சாலையில் வசித்து வரும் சரவணன்(46) என்பவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது வியாபாரத்திற்காக சென்னையிலிருந்து வாகனத்தில் வரும் சிகரெட்டை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே நின்று மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.

 

அதன்படி கடந்த 22-ஆம் தேதி நள்ளிரவு இவர், விருத்தாசலம், அண்ணா நகரைச் சேர்ந்தவரும் தனது 10 வருட நண்பருமான சீனிவாசன் என்பவருடன் சிகரெட் கொள்முதல் செய்வதற்காக 3 லட்சம் ரூபாய் பணத்துடன் தனக்கு சொந்தமான ஆம்னி காரில் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள கார் பார்க்கிங் முன்புறம் தனது ஒம்னி வாகனத்தை நிறுத்திவிட்டு காரின் முன்புறமுள்ள டேஷ்போர்டில் பணத்தை வைத்துவிட்டு சென்னையில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனத்திற்காக காரின்  அனைத்து கதவுகளையும் முழுவதுமாக மூடிவிட்டு காரினுள் காத்திருந்தனர். 

 

அப்போது இருவரும் இரவு நேரம் என்பதால் தூங்கிவிட்டனர். அதிகாலை 2 மணியளவில் சரவணன் தூங்கி எழுந்து பார்த்தபோது டேஷ்போர்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை, உடனிருந்த தனது நண்பர் சீனிவாசனை எழுப்பி பணத்தை காணவில்லை எனக்கூறியதும் இருவரும் கார் முழுவதும் தேடிப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.

 

காரின் முன்பக்க கண்ணாடி சிறிதளவு இறங்கியிருந்ததை பார்த்த சரவணனுக்கு தன்னுடன் இருந்த தன் நண்பர் சீனிவாசன் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் காரினுள் பணம் இருந்த இடமும் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்பதால் சீனிவாசன் மீது சந்தேகப்பட்டு வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சரவணன் உறங்கி கொண்டிருந்ததை பயன்படுத்தி சீனிவாசன் காரினுள் இருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடி தனது நண்பரான விருத்தாசலம் வி.என்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை வரவழைத்து காரின் முன்பக்க கதவை சிறிது திறந்து பணத்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.

 

இதையடுத்து பணத்தை திருடிய விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சீனிவாசன் (29), அவரது நண்பர் விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் சுரேஷ் குமார் (36) ஆகியோர் மீது வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு பறிகொடுத்த சரவணணிடம் ஒப்படைத்தனர். 10 ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய நண்பனிடமே பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.