சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் ஒருவர் திராவிட மாடல் தான் பிரிவினையை தூண்டுவதாக கூறியிருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட இயற்றியது திராவிட மாடல். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்பம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.45 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” என்றார்.