Skip to main content

ஒரே நாளில் 4 ரவுடிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்! சேலம் காவல்துறை அதிரடி!

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

rowdies goondas act salem district police

 

சேலத்தில் திருட்டு, வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த நான்கு ரவுடிகளை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் கன்னங்குறிச்சி காமராஜர் சாலையைச் சேர்ந்த சரவணன் மகன் கோகுல்நாத் என்கிற கோகுல் (வயது 29). இவர் மீது சின்னத்திருப்பதி பாரதி நகரைச் சேர்ந்த ராஜமகேந்திரன், கன்னங்குறிச்சி சேவி கவுண்டர் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது. 

 

இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் விடுதலையான அவர், கடந்த ஜூன் 22- ஆம் தேதி பிரபாகரன் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4800 ரூபாயை பறித்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

 

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் ஜாபர் அலி (வயது 35), கிச்சிப்பாளையம் ஓந்தாபிள்ளைக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் (வயது 34) ஆகியோரும் பல்வேறு நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். 

 

சேலம் அம்மாபேட்டை பெரிய கிணற்றுத் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் பாலமுருகன் (வயது 45), வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். லாட்டரி சீட்டு என்ற பெயரில் வெள்ளைத்தாளில் போலியாக எண்களை எழுதி, விற்பனை செய்து வந்துள்ளார். அதைத் தட்டிக்கேட்ட ரங்கநாதன் என்பவரை மிரட்டியதோடு, கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். இச்சம்பவத்தில் பாலமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

கோகுல்நாத் என்கிற கோகுல், ஜாபர் அலி, கார்த்திக், பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் நடந்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தார். 

 

அதன்பேரில், காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு ரவுடிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குற்ற வழக்குகளின்பேரில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் நேரில் வழங்கினர். 

 

ஒரே நாளில் நான்கு ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, மற்ற ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ்!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Goondas act on Rowdy Karukka Vinoth

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகையும் குற்றச்சாட்டுகளை வைத்தது. 

 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருந்தது.

 

இதையடுத்து, அவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினாலும் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில், தற்போது ரவுடி கருக்கா வினோத்தை குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். அதற்கான ஆணையை புழல் சிறையில் இருக்கும் கருக்கா வினோத்திடம் போலீசார் கொடுத்துள்ளனர். 

 

 

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.