Skip to main content

''ரூட்டு தல விவகாரம்... இனி கைதுதான்...''- எச்சரிக்கும் சென்னை காவல்துறை!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

'' Route thala  affair ... now arrested ... '' - Chennai Police warns!

 

சென்னையில் கெத்து காட்டுவதற்காக தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

பேருந்து ரயில்களில் ரூட்டு தல எனக் கூறிக்கொண்டு தகராறில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை போலீசார் கண்காணித்து அவ்வப்போது அறிவுரைகள் வழங்கி வருகின்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தகராறில் ஈடுபட்ட 2 ரூட்டு தல, உட்பட 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி ரூட்டு தல பிரேம்குமார், திருத்தணி ரயில் ரூட் தல கிஷோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 16ஆம் தேதி பல்லவன் சாலையில் பேருந்து நடத்துநரை தாக்கிய நியூ காலேஜ் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அப்துல் முத்தலிப், லோகேஷ் உட்பட மூன்று கல்லூரி மாணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கல்லூரி விழாவில் கலந்து கொள்வது குறித்த பிரச்சனையில் மோதிக்கொண்ட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் கொண்டு வந்த பைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவற்றை பறிமுதல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்திக்கையில்,  ''பேருந்து மற்றும் ரயிலில் ரூட்டு தல என்ற பெயரில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் இதற்கடுத்து கைது போன்ற நடவடிக்கைகள்தான் இருக்கும். ஏற்கனவே கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மாணவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் இனி அடுத்த கட்ட நடவடிக்கையாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்யப்படுவர்'' எனத் தெரிவித்திருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்