சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. பேருந்து மற்றும் ரயில் பயணங்களின் பொழுது கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல தொடர்பாக பிரச்சனைகளும் மோதல்களும் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடத்தினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாசலில் வைத்து மாணவர் சுந்தர் கொடூரமாக கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மாணவர் சுந்தர் மாநிலக் கல்லூரியில் பி.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த மோதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இது தொடர்பாக இரண்டு கல்லூரிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவனின் உயிரிழப்பை தொடர்ந்து மாநிலக் கல்லூரிக்கு இன்று முதல் ஆறு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலக் கல்லூரியின் முதல்வர் ராமன் அறிவித்துள்ளார்.