அள்ள அள்ளக் குறையாதது அட்சயபாத்திரம். இது அதிசயமாய் இயற்கையால் மக்களுக்குத் தரப்படும் வரப்பிரசாதம். அப்படிப்பட்ட வரப்பிரசாதம்தான் அந்த அதிசயக் கிணறு.
நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை தாலுகாவில் வரும் கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து மழை வெள்ளப்பெருக்கால் நிமிடத்திற்கு இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தாலுகாவின் அக்கம்பக்கக் குளங்கள் நிரம்பின. அதனைத் தொடர்ந்து திசையன்விளையை அடுத்த ஆயன்குளம் படுகை நிரம்பியதுடன், அதன் அருகிலுள்ள ஒரு பாழுங்கிணற்றுக்குள் அணை தண்ணீர் செல்கிறது.
மழைக் காலம் மற்றும் அணை திறப்பு வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்தக் கிணற்றுக்குள் எவ்வளவு தண்ணீர் சென்றாலும், குறிப்பாக வெள்ளமே சென்றாலும் மற்றக் கிணறுகள் நிரம்புவதுபோன்று இந்தக் கிணறு நிரம்பியது கிடையாது. எவ்வளவுதான் இந்தக் கிணற்றுக்குள் தண்ணீர் சென்றாலும், அதனை முழுவதும் பூமி உள்வாங்குவதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலத்தடி நீர் உயர்வதாகவும், அதன் காரணமாக இப்பகுதியின் உப்புநீர் குடிதண்ணீராக மாறுகிறது. எங்களுக்கு உபயோகப்படுகிறது என்கிறார்கள் ஆயன்குளம் கிராம மக்கள்.
பெருவெள்ளக் காலங்களில் எத்தனையோ கிணறுகள் நிரம்பினாலும், இந்தக் கிணற்றுக்குள் பெருவெள்ளமே சென்றபோதிலும் நிரம்பியதை நாங்கள் கண்டதில்லை. தனியாருக்குச் சொந்தமானன இந்தப் பாழும் கிணறு எங்களுக்குக் கிடைத்த அட்சய பாத்திரம். இதனால் பல பகுதிகளின் நிலங்களில் ஈரப்பதமிருப்பதால் விவசாயப் பலனும் கிடைக்கிறது என்கிறார்கள்.
இதனிடையே, இதனைக் கேள்விப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு, மாவட்டக் கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வெள்ளக் கண்காணிப்பு அதிகாரியான செல்வி அபூர்வா உள்ளிட்டோர் கிணற்றை ஆய்வு செய்தனர். சபாநாயகர் அப்பாவு இந்தக் கிணற்றைப் பராமரிக்கும்படி அதிகாரிகளிடம் பணித்திருக்கிறார்.
அந்தப் பகுதியின் வரமாகப் பெற்ற இந்த அதிசய அட்சயப் பாத்திரக் கிணற்றை ஏராளமானோர் வாகனங்களில் கூட வந்து பார்த்துச் செல்லுமளவுக்கு ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது ஆயன்குளம் கிணறு.