Skip to main content

இருளர் சமூகப் பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு! - உறவினர்கள் சாலை மறியல்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

road blockade for not road proper road to grave yard

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது வழுக்கம்பாறை. இந்தப் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களில் யாராவது ஒருவர் இறந்துபோனால் சடலத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் அவ்வப்போது பிரச்சனைகளைச் சந்தித்து வந்துள்ளனர்.

 

சுடுகாட்டிற்குச் செல்வதற்கு நிரந்தர வழி ஏற்படுத்தித் தருமாறு வட்டாட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தித் தரவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் அந்தப் பகுதியைச் சேர்ந்த இருளர் இனப் பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து போயுள்ளார். இதையடுத்து, அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

 

ஆனால் ஒரு தரப்பினர் அந்த வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல வழிவிட மறுத்து தகராறில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதனால், கோபமுற்ற பழங்குடி இருளர் இன மக்கள் அந்தச் சடலத்தை செஞ்சி திருவண்ணாமலை சாலையில் குறுக்கே வைத்து கறுப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சடலத்துடன் சாலை மறியல் செய்துவந்த பழங்குடி இருளர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 

இதையடுத்து சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலைக் கைவிட்டுச் சடலத்தைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்தப் போராட்டத்தினால் செஞ்சி திருவண்ணாமலை சாலையில், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சுடுகாட்டிற்கு, இறந்தவர் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்று பழங்குடி இருளர் இனமக்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்