Skip to main content

ஆற்று மணல் திருட்டை நிறுத்தாவிட்டால் போராட்டம் - திரைப்பட இயக்குனர் கவுதமன் எச்சரிக்கை

kavuthaman

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொழுதூர் அணைக்கட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு தொழுதூரிலிருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்லப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திரைப்ட இயக்குனர் கவுதமன் இன்று தொழுதூர் அணைக்கட்டு பகுதி வெள்ளாற்றில் மணல் திருடப்படும் இடங்களை பார்வையிட்டார்.
 

பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த கவுதமன், "தொழுதூர் அணைக்கட்டு அருகே வெள்ளாற்றில் சட்ட விரோதமான முறையில் ஆளும்கட்சி ஆதரவுடன் மணல் திருடி செல்லப்படுகிறது.  இதனால் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 43 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் நடைபெறும் அரசு கட்டுமான பணிகளுக்கும், முதல்வரின் உறவினர்கள் என கூறிக்கொள்ளும் சிலரின் நட்சத்திர ஹோட்டல் கட்டவும் இங்கிருந்து மணல் திருடிச் செல்லப்படுகிறது. 


அரசும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மணல் திருட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவேண்டும். இல்லையென்றால்  பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தி மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோம். இது அரசுக்கு விடுக்கப்படும் கோரிக்கை அல்ல, எச்சரிக்கை. சம்மந்த பட்டவர்கள் திருந்தி கொள்வதும், திருத்திக் கொள்வதும் நல்லது" என்றார். அந்நிகழ்வின் போது  விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கிராம முக்கியஸ்தர்கள் என பலர் உடனிருந்தனர்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !