கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் தீவிர கவனம் செலுத்தும் முதன்மையான சட்டமன்ற உறுப்பினர்களில் வசந்தன் கார்த்திகேயனும் ஒருவர். அவரது தொகுதியில் வறிய நிலையில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் இப்படிப்பட்டவர்களுக்கு அரசு திட்டங்களை கொண்டுசேர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் சங்கராபுரம் அருகே உள்ள சின்னகொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ். இவரது மகள் சுஷ்மிதா. இவர் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சுஷ்மிதா முழு அளவில் பணம் செலவு செய்து படிக்க முடியாத நிலையில் இருந்தார். எனவே அவர் படிப்புக்கு கல்விக்கடன் கொடுத்து உதவி செய்யுமாறு பகண்டை கூட்டு சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். வங்கி மேலாளர் சுஷ்மிதாவிற்கு கல்விக்கடன் வழங்குவதற்கு மிகுந்த தாமதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சிக்காக அப்பகுதிக்கு சென்றுள்ளார். எம்எல்ஏ வந்திருக்கும் தகவல் அந்த மாணவி சுஷ்மிதாவிற்கு தெரியவந்தது. அங்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனை மாணவி நேரில் சந்தித்து தனது படிப்பிற்கு வங்கி கடன் உதவி செய்து தராமல் இழுத்தடிப்பது குறித்து முறையிட்டுள்ளார். அதைக் கேட்டு மனம் வருந்திய எம்எல்ஏ மாணவி சுஷ்மிதாவை கையுடன் அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று வங்கி மேலாளரிடம் மாணவிக்கு கல்விக்கடன் தராதது குறித்து விவரம் கேட்டுள்ளார்.
அதோடு மாவட்ட ஆட்சியர் சரவண்குமாரிடம் மாணவி நிலை குறித்து எடுத்து கூறினார். அதோடு உடனே மாவட்ட ஆட்சியர் சரவண்குமாரிடம் சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கியின் மண்டல மேலாளரிடம் இது குறித்து விவரம் தெரிவிக்கக் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி மண்டல மேலாளரிடம் மாணவி நிலை குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இந்த தொடர் நடவடிக்கையின் காரணமாக மாணவிக்கு கல்விக்கடன் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஒரு மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாணவிக்கு கல்விக்கடன் வழங்க வங்கி முன்வந்தது. மாணவி சுஷ்மிதா எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கண்ணீர் வழிய நன்றி தெரிவித்துள்ளார். இது போன்று பாதிக்கப்படும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் எம்எல்ஏ தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியினர் தெரிவித்தனர்.