தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்புடன் 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விருத்தாசலம் நகராட்சியால் கட்டப்பட்ட புதிய நூற்றாண்டு விழா கலையரங்கம் மற்றும் நுழைவு வாயில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஓய்வு) கி.தனவேல், பாடலாசிரியர் அறிவுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வழக்கறிஞர் கோ.பாலச்சந்திரன் வரவேற்றார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பள்ளியின் முன்னாள் மாணவரும் சென்னை உயர்நீதிமன்ற (மதுரை அமர்வு) நீதிபதியுமான புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் பேசிய நீதிபதி புகழேந்தி, "40 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த பள்ளிக்கு வந்துள்ளேன். ஒவ்வொருவரது வாழ்வின் உயர்விற்கும் பள்ளிப் படிப்பு பயின்ற பள்ளிக்கூடம் மிகவும் முக்கியமானது. நமது வாழ்க்கை உயரக் காரணம் பள்ளிக்கூடமும் ஆசிரியர்களும் தான். நான் சட்டத்துறையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இந்த பள்ளிக்கூடமே. நான் என்.சி.சி, என்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளில் இணைந்து பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அவ்வாறு இயங்கியபோது இந்த பள்ளியில் நடந்த ஒரு பட்டிமன்றமே நான் சட்டத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமானது. நான் அதற்கு பிறகு சட்டம் படித்து வழக்கறிஞராகி, அரசு தலைமை வழக்கறிஞராக உயர்ந்து, இன்று நீதிபதியாக உங்கள் முன்பு வந்துள்ளேன்.
நமது வாழ்க்கையின் படிக்கட்டுகளாக இந்த பள்ளிக்கூடம் அமைந்திருக்கிறது. இந்த உயரத்திற்கு வந்த பிறகு நாம் இந்த பள்ளிக்கூடத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் எனக்குள் எழுந்திருக்கிறது. அதேபோல உங்கள் ஒவ்வொருவருக்கும் எழுந்திருக்கிறது. அது இன்று சாத்தியமாகியுள்ளது. இது சாத்தியமானதற்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தான் காரணம். முன்னதாக இந்த பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் தான் கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் கலெக்டர் பாலசுப்பிரமணியன், ‘கலையரங்கமாக கட்டுங்கள். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' எனக் கூறியதும் அனைவருமே அதற்கு ஒப்புக்கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது நேரத்தையும், உடல் உழைப்பையும் செலவிட்டு இந்த கலையரங்கத்தையும் நுழைவு வாயிலையும் சிறப்பாக கட்டியுள்ளனர். இதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பை நாம் பாராட்ட வேண்டும். இதற்கு அரசின் நமக்கு நாமே திட்டமும் ஒரு காரணம். நமது பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு தான். ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கலையரங்கம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பள்ளிக்கூடம் படம் பார்த்தபோது நாமும் இந்த பள்ளிக்கூடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். படத்தில் தங்கர்பச்சான் மிகவும் ஏழ்மையாக இருந்து முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியை மீட்டெடுப்பார். அதுபோல இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரியல் ஹீரோக்களாக மாறி இந்த பள்ளியை கட்டமைத்து வருகின்றனர். அந்த நிஜ ஹீரோக்களுக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகமும் நன்றாக கட்டமைந்தால் பெற்றோர்களும் மாணவர்களுமே அந்தப் பள்ளியை பார்த்துக் கொள்வார்கள். இந்த பள்ளியை போன்று முன்மாதிரியாக கொண்டு மற்ற பள்ளிகளையும் சிறப்பாக கட்டமைக்க இந்த மாவட்டத்திலிருந்து கலெக்டர் முன்னெடுத்து செயல்படுத்தினால் மற்ற மாவட்டங்களுக்கும் இது பரவும். இதனால் நமது தமிழகம் மிகப் பெரிய நலனை பெரும். மாணவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். நமது மாநிலம் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக திகழும். இந்த மாவட்டத்தின் கலெக்டர் அற்புதமான மனிதர். நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். என்னுடைய பல வழக்குகளின் வெற்றிக்கு கலெக்டர் அவர்களின் உழைப்பும் நேர்மையுமே காரணம். நானும் அவரும் ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறோம். அவர் இந்த மாவட்டத்திற்கு வந்து மூன்று வாரங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஆறாவது இடத்திற்கு நமது வருவாய் மாவட்டத்தை கொண்டு வந்துள்ளார். விரைவில் முதல் இடத்திற்கும் கொண்டு வருவார். அவருக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்தப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. மாணவர்களிடம் நல்லொழுக்கம் இல்லை. மாணவர்களிடம் தவறான பழக்கம் பரவுகிறது என அறிந்தேன். நாங்கள் படித்தபோது இந்த பள்ளிக்கூடத்தில் என்.சி.சி போன்ற அமைப்புகள் இருந்தன. இதனால் நாங்கள் நல்ல பழக்கங்களையும் கற்றுக் கொண்டோம். தற்போது அந்த அமைப்புகள் இந்த பள்ளியில் செயல்படவில்லை என அறிந்தேன். அதனால் கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அரசு பள்ளி மாணவர்களை நல்ல முன்னெடுப்புக்கு கொண்டு வர வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதற்கு பங்களிப்பு தர வேண்டும். உழைப்பும் முயற்சியும் ஒழுக்கமும் நம்மை முன்னேற்றும். இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.
தனியார் கல்வி நிறுவனங்களில் தான் எங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பார்கள். இதுதான் அரசு பள்ளியில் எனது முதல் நிகழ்ச்சி. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அதிக சம்பளத்தை அரசு பள்ளி ஆசிரியர்கள் பெறுகிறார்கள். ஆனால் அர்ப்பணிப்பு அரசு ஆசிரியர்களிடம் குறைவாக உள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் முன் வர வேண்டும். அவ்வாறு நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்தால் என்னை போன்ற நீதிபதியாகவோ, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவோ மாணவர்கள் வருவார்கள். தமிழகத்திற்கே நாம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.
நான் படித்த பள்ளியிலேயே நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பைக் கொடுத்தவர்களுக்கு நன்றி. இதனை இதோடு நிறுத்தி விடாமல் இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டி முடிக்கும் வரை முன்னாள் மாணவர்களின் பணிகள் தொடர வேண்டும். மற்றவர்களையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு நாம் முன் உதாரணமாக இருந்து, முன்னாள் மாணவர் சங்கமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து அரசாங்கத்தை நாம் எதிர்பார்க்காமல் நாமே இந்த அரசு பள்ளிகளை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். ஏழை மாணவர்களும் நல்ல நிலையை அடையலாம். அவர்கள் நல்ல நிலையை அடைந்தால் நமது நாடும் நல்ல நிலையை அடையும்" என்றார்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்களை மேடைக்கு அழைத்து அவர் பாராட்டினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த், நகர் மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி, மாவட்ட கல்வி அலுவலர் துரை பாண்டியன், நகராட்சி ஆணையாளர் சேகர், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.