கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு, சமூகத்தில் எந்த அளவில் உள்ளது என்பதைக் கண்டறிய, மாநிலங்கள் முழுவதும் தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வை நடத்திவருகிறது. அதில் முதல் ஆய்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஆய்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.
முதல் ஆய்வில் 31% பேருக்கும், இரண்டாவது ஆய்வில் 23% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என தெரியவந்தது. இந்நிலையில், 3வது கட்ட ஆய்வை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை கடந்த வாரம் தொடங்கி, 46 சுகாதார மாவட்டங்களில் 888 நோய் பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டு மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
அதில் மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் 960 மாதிரிகளும், புதுக்கோட்டையில் 240 மாதிரிகளும், கரூரில் 390 மாதிரிகளும், பெரம்பலூரில் 210 மாதிரிகளும், அரியலூரில் 270 மாதிரிகளும், தஞ்சையில் 840 மாதிரிகளும், திருவாரூரில் 420 மாதிரிகளும், நாகையில் 300 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளின் முடிவுகள் அனைத்தும் அடுத்த முப்பது நாட்களில் வெளியாகும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.