வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேக்கமடைந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். நேற்று சென்னையில் பல இடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த நிலையில், இன்று கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் தமிழக பேரிடர் மீட்புத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் நேற்று ஆய்வு செய்தார். இன்றைக்கு கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்பாகவே கடலூரில் இருக்கின்ற உள்ளூர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோரை அங்கேயே இருந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் முதல்வர் செல்வதற்கு முன்பாகவே அங்கு சென்று நிவாரணப் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆகவே இந்தப் பணிகளை எல்லாம் முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்கின்ற காரணத்தால் இன்று மிகப்பெரிய பாதிப்புகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசாங்கத்தில் ஒரு வரையறை இருந்தாலும் கூட தமிழக முதல்வர் வந்த பிறகுதான் முடிவு தெரியும். இப்பொழுது அரசாங்கத்தின் கணக்குப்படி பார்த்தோம் என்று சொன்னால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால் 4,800 ரூபாய், குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் 5,000 ரூபாய், பகுதி இடிந்து இருந்தால் 4,100 ரூபாய், கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் 95 ஆயிரம் ரூபாய். இது இப்பொழுது இருக்கக்கூடிய அரசினுடைய விதி. தமிழக முதல்வர் மழைச்சேதங்களைப் பார்வையிட்டு வந்தபின் இந்தத் தொகை எல்லாம் வழங்கப்படுவதற்கான பணிகளைச் செய்கிறோம். குறிப்பாக விவசாய நிலங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மழைநீர் வடிந்த உடனே உடனடியாக அதிகாரிகளைத் துரிதப்படுத்தி நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்.'' என்றார்.