தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (01/07/2022) காலை 11.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கரோனா நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப., சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.