ஆத்தூர் அருகே நூற்பாலையில் அதிக வேலை கொடுத்து கொடுமைப்படுத்தியதாக வந்த புகாரின் பேரில் 35 வடமாநிலப் பெண் தொழிலாளர்களை வருவாய்த்துறை அலுவலர்கள் மீட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ளூர் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் நூற்பாலைக்குச் சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், பெண்கள் உதவி மைய எண்ணான 181க்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய பெண்கள், நூற்பாலையில் உள்ள இளம்பெண்களுக்கு அதிக வேலை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் தலைவாசல் வட்டாட்சியர் வரதராஜன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அக்.29ம் தேதி இரவு அந்த நூற்பாலைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 35 பெண்கள் பணியாற்றி வருவது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, தங்களுக்கு அதிகமாக வேலை கொடுப்பதாகவும், மிகை நேரப்பணிக்கான ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும், போதிய உணவு வழங்குவதில்லை என்றும் கூறினர்.
ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தால் சென்று விடுவோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 35 வடமாநிலப் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய பணப்பலன்கள் அனைத்தையும் அதிகாரிகள் பெற்றுக்கொடுத்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.