Skip to main content

“ஆசிரியரின் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” - ராமதாஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 Repeal Ordinance 243 which deprives teachers of promotion says Ramadoss

ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பறித்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களிடம் இருக்கும் உரிமைகளையும் அரசு பறிப்பது கண்டிக்கத்தக்கது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத தமிழக அரசு, இப்போது அரசாணை 243 என்ற பெயரில் அவர்களின் மீது பேரிடியை இறக்கியுள்ளது. கடந்த திசம்பர் 21&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையின்படி தொடக்கக் கல்வித்துறையில்  இடைநிலை ஆசிரியர்கள்,  தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.

அரசாணை 243 - இன் மூலம் ஒன்றிய அளவிலான முன்னுரிமை பறிக்கப்பட்டு, மாநில முன்னுரிமை திணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சொந்த ஒன்றியத்தில் பணியாற்றியவர்கள் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டத்திற்கும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை 60%  பெண்கள் தான் பணியாற்றுகின்றனர். கணவர் பணி செய்யும் இடம், குழந்தைகளின் கல்வி, குடும்பச் சூழல், சொந்த ஊரில் பணி செய்வதில் உள்ள வசதி உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் சொந்த ஒன்றியத்தில் பணி செய்வதையே விரும்புவார்கள்; வெளி மாவட்டத்திற்கு சென்று பணியாற்ற விரும்ப மாட்டார்கள். அதனால், அவர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் கூட, அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும். அதனால், இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்த ஒருவர், ஓய்வு பெறும் போது அதே நிலையிலேயே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். இது சமூக அநீதி.

243-ஆம் அரசாணையின்படி, 20 ஆண்டுகளாக  இருந்த பதவி உயர்வு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.  நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 243-ஆம் அரசாணையின்படி பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த/ பதவி உயர்வு பெற்ற நாள் தான் தகுதி காணும் நாளாக கணக்கில் கொள்ளப்படும். அதன்படி, பட்டதாரி ஆசிரியராக  7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கும், பத்தாண்டுகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், அதன்பின் 6 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றியவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டால் மொத்தம் 16 ஆண்டுகள் பணியாற்றியவரை ஒதுக்கி விட்டு, 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு தான் பதவி உயர்வு வழங்கப்படும். இது என்ன நியாயம்?

தமிழக அரசின் இந்த புதிய ஆணை பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. இதனால், அதிகபட்சமாக 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் பயனடைவர்.  ஆனால், இந்த அரசாணையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் இது ஒரு சிறப்பான அரசாணை என்று தமிழக அரசு பரப்புரை  செய்து வருகிறது. ஆசிரியர்களின் பிரச்சினைகள் என்னவென்று கூட தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் தெரியவில்லை என்பதையே 243&ஆம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய விகிதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கடுமையான முரண்பாடுகளும், பாகுபாடுகளும் நிலவி வருகின்றன. அவற்றைக் களைய வேண்டும் என்பதற்காகத் தான் அரசு ஊழியர் அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதைக் கூட புரிந்து கொள்ளாமல் ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு துரோகத்தைக் களையும் வகையில், 243&ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீதிபதி மகாதேவனுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Anbumani Ramadoss wishes to Justice Mahadevan!

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று ஜம்மு - காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் நீதிபதி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி மகாதேவனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் அரங்க. மகாதேவன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Anbumani Ramadoss wishes to Justice Mahadevan!

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மகாதேவன் அவர்கள் கடந்த 11 ஆண்டுகளில் சிறப்பான பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றும், தமிழ் மொழியில் புலமையும் கொண்ட மகாதேவன், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் பணியில் இருக்கப் போகும் நீதிபதி மகாதேவன், சமூகநீதி, மொழி சார்ந்த சிறப்பான தீர்ப்புகளை வழங்கி நீதித்துறை வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Archaeological training for government school teachers

பள்ளிகள் தோறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை தொடங்க மதுரையில் அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் வளர்ப்பதற்காகவும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள  உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. 

இதை மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும்  செயல்படுத்துவதற்காக இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு களப்பயணத்துடன் கூடிய ஒருநாள் சிறப்புப் பயிற்சி கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் செக்கானூரணி  அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சொ.சாந்தலிங்கம் தொல்லியல், அகழாய்வு, நாணயவியல், கல்வெட்டியல் பற்றியும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பள்ளி மாணவர்களிடம்   தொல்லியலில் ஆர்வத்தை உருவாக்குவது, பள்ளியில் நடத்தப்படவேண்டிய தொல்லியல் நிகழ்வுகள் பற்றியும் பேசினர். பின்னர் களப்பயணமாக கொங்கர் புளியங்குளம் மலைக்குகையின் விளிம்பில் உள்ள 3 தமிழி கல்வெட்டுகளை ராஜகுரு படித்துக் காட்டி விளக்கமளித்தார். இரு கல்வெட்டுகளில் மலை, பொன் ஆகியவற்றின் குறியீடுகள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் வியந்தனர். 

இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து கற்றுத்தர உள்ளனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்வி அலுவலர் சொ.சவகர், பள்ளித் தலைமையாசிரியர் வ.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்தனர். இப்பயிற்சியில் 46 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.