ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் குடியேறிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திரா நகர்ப் பகுதியில் இருக்கும் முள்ளா ஏரியைச் சுற்றி பல்வேறு குடியிருப்புகள் உள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி பல்வேறு வணிக நிறுவனங்களும் உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலையில் குடியேறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கக்கூடாது; துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்; எங்களுக்கு உடனடியாக மாற்று இடம் தர வேண்டும், அதுவரை எங்களுடைய குடியிருப்புகளிலிருந்து எங்களை வெளியேற்றக்கூடாது என கோரிக்கை வைத்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு அதிகப்படியான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.