Relatives arriving to pick up passengers must arrive 5 hours late

உலகத்தை அச்சுறுத்திவந்த கரோனா வைரஸ் தற்போது உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸாகப் பரவ ஆரம்பித்துள்ளது. உலக நாடுகள் தற்போது மீண்டும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கியுள்ள நிலையில், சர்வதேச வழித்தடங்களைத் தற்காலிகமாக மூட பல நாடுகள் முன்வந்துள்ளன. ஆனால் இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச எல்லைகளை மூடாமல் உள்ளது.

Advertisment

ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புதிய கரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (02.12.2021) காலை சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை முறையாக சோதனை செய்து, சோதனை முடிவுகள் வெளிவந்த பின்பு மட்டுமே அவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisment

இந்தப் புதிய கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் கூறுகையில், “வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு வெளியேற அனுமதிக்கப்பட்டுவருகின்றனா்.

இன்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களில் 282 பயணிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, மூன்றரை மணி நேரத்தில் முடிவுகள் பெறப்பட்டு பயணிகள் வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் உறவினர்கள் 5 மணி நேரம் தாமதமாக வர வேண்டும்” என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.