Skip to main content

தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
Registration of case under 7 sections against Demudikavinar

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  09.05.2024 அன்று விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டது.

நேற்று சென்னை வந்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களின் வரவேற்புடன் விஜயகாந்தின் நினைவிடத்தில் விருதினை வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இந்தப் புகழ், இந்த விருது எல்லாமே விஜய்காந்தையே சேரும். இதே விஜயகாந்த் அங்கே இருந்திருந்தால் கதர் வேட்டி, கதர் சட்டை போட்டுக்கொண்டு நெற்றி நிறைய திருநீறு வைத்துக்கொண்டு தமிழர்களின் பண்பாட்டை அங்கு நிலைநாட்டி அந்தப் பெருமைக்குரிய விருதை வாங்கி இருந்தால் அது மிகப்பெரிய வரமாக இருந்திருக்கும். ஆனால் காலம் தாழ்ந்து கிடைத்தாலும் அந்த விருதை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு மீண்டும் நன்றிகளை சொல்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பெருமளவு கூட்டத்தை கூட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அனுமதியின்றி வாகன பேரணி செல்ல முயன்றதாகவும், தேமுதிக தொண்டர் ஒருவர் விமான நிலையத்தில் நின்ற கார் மீது ஏறி கொடிக்கம்பத்தால் அடித்து காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உட்பட தேமுதிகவினர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

காணாமல் போன இளம்பெண்; கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையம் முற்றுகை

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Missing Girl; Find out and lay siege to the police station

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 19 ந் தேதி திடீரென காணாமல் போன நிலையில் உறவினர், தோழிகள் வீடுகளில் எல்லாம் தேடிய உறவினர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில் ஆலங்குடி போலீசார் அந்த பெண் பயன்படுத்திய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர் யாருக்கெல்லாம் போனில் பேசியுள்ளார் என்ற விபரங்களை சேகரித்து சில குறிப்பிட்ட எண்ணில் உள்ளவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புகார் கொடுத்து சில நாட்களாகியும் இளம்பெண்ணை கண்டுபிடித்துத் தரவில்லை என்று இன்று செவ்வாய்க் கிழமை மாலை ஆலங்குடி காவல் நிலையம் முன்பு திரண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் செல்போன் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர் விசாரனை நடப்பதால் விரைவில் மீட்கப்படுவார் என்று போலீசார் உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

Next Story

“தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்” - தேமுதிக கண்டனம்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
dmdk condemns Budget is a disappointment for Tamil Nadu

மத்திய அரசு அறிவித்திருக்கும் பட்ஜெட், தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடுமையாக சாடியுள்ளது. 

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு அறிவித்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பெயரளவில் கூட தமிழ்நாடு என்ற ஒரு சொல் கூட பட்ஜெட் வாசிப்பில் இல்லை. பீகாருக்கும், ஆந்திர பிரதேசத்திற்கு தரும் முக்கியத்துவம் எந்த ஒரு வகையிலும் ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு தரவில்லை என்பது கண்டனத்திற்குரியது. 

அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே ஜிஎஸ்டி (GST) மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு விதமான துன்பங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியை ஓரளவு குறைந்தாலும், விசைத்தறிகள், சிறு, குறு வியாபாரம் மற்றும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். மேலும் சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது.

எனவே ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய பட்ஜெட்டில் புதிதாக விவசாயத்திற்கோ, ரயில்வே துறையிலையோ, சாலைகளுக்கோ என எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. எனவே “ஒரு கண்ணில் வெண்ணையும்”, “ஒரு கண்ணில் சுண்ணாம்பும்” வைத்து தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக தமிழக மக்களாகிய நாங்கள் பார்க்கிறோம். இது பெரும் கண்டனத்துக்குரிய மத்திய பட்ஜெட் ஆகும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.