
மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு தீ வைத்து அதன் முன்னால் சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விவேக். அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்த விவேக் அதில் கதை நாயகன் மளமளவென பற்றி எரியும் தீயிக்கு முன் மாஸாக நடந்துவரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதேபோல் தானும் வீடியோ எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட சுகாதார ஆய்வாளர் விவேக் திருப்பத்தூர் பாவுச பகுதிக்கு சென்று அங்கு திடக்கழிவு மேலாண்மைக்காக குப்பைகளை சேகரித்து வைத்திருந்த குப்பை கிடங்கிற்கு அவரது உதவியாளரின் உதவியுடன் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பற்றி எரியும் நெருப்புக்கு முன் மாஸாக நடந்துவருவது, கண்ணாடி அணிந்து கொள்வது போன்ற வீடியோக்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வைரலானது. இந்நிலையில் குப்பை கிடங்கிற்கு தீவைக்க உதவி புரிந்த நகராட்சி ஊழியர் ஒருவரை பணியிடைநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள விவேக், எரிந்துகொண்டிருக்கும் குப்பையை பார்க்கச்சென்ற பொழுது எனக்கே தெரியாமல் யாரோ வீடியோ எடுத்த பரப்பிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.