Skip to main content

பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க கோரி தொடர் போராட்டம் - அண்ணாமலை

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

sdf

 

தமிழ்நாட்டில் வரும் 3ஆம் தேதிவரை பெட்ரோல் டீசல் வரியைக் குறைக்கக் கோரி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

இந்தியா முழுவதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைத்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை பெரிய அளவில் குறைத்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி இதுவரை குறைக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைப் போல் வரியைக் குறைக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி குறைக்க வேண்டும். குறிப்பாக, சிலிண்டர் விலையை ஏற்கனவே கூறியபடி 100 ரூபாய் குறைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்