பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக உபா சட்டத்தின் கீழ் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அது தொடர்பான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை சேர்ந்த தந்தையும், இரண்டு மகன்களும் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ள 'ஹிஷாப் உத் தஹிரீர்' என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு கூட்டங்களை நடத்தியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன், தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தண்டையார்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகள் சோதனை நடைபெற்றது.
சோதனையின் முடிவில் முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அஹ்மத் அலி உமாரி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக ஆறு பேர் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் தமிழக அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் ஒருவர் கைது செய்யப்படும் பட்சத்தில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) தாமாக முன்வந்து விசாரிக்கும். அதன் கீழ் நடைபெறும் நடவடிக்கைகள் மற்றும் கைதுகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிக்கை அளிப்பர். அந்த நடைமுறையின் அடிப்படையில் தற்போது தமிழக அரசுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னர் என்.ஐ.ஏ முழுமையான விசாரணையில் இறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.