
இடைப்பாடி அருகே, அய்யனாரப்பன் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, அந்தக் கோயிலை பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள குருக்கப்பட்டி கல்மேட்டூரில் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. இந்தக் கோயிலின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே பல ஆண்டாக மோதல் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மே 22ம் தேதி வட்டாட்சியர் பானுமதி தலைமையில், இரு தரப்பினரையும் வருவாய்த்துறை அலுவலர்கள் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சங்ககிரி கோட்டாட்சியர் முன்னிலையில் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை யாரும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும் வருவாய்த்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், மே 24ம் தேதி ஒரு தரப்பினர், திடீரென்று கோயிலுக்குள் நுழைந்து, தவ பூஜை நடத்தப் போவதாகக் கூறினர். இதற்கு, எதிர் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் பானுமதி, பூலாம்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரலேகா, எஸ்.ஐ. அமிர்தலிங்கம் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் பிரச்சனைக்குரிய கோயிலுக்கு விரைந்தனர். அவர்கள் கோயிலை இழுத்துப் பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மே 25ம் தேதி ஒரு தரப்பினர், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் கோயிலுக்கு வந்து, நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, கோயிலில் இரு தரப்பினரும் பூஜை செய்து கொள்ளலாம் என்றும், ஒரு பிரிவினர் பூஜை நடத்தும்போது மற்றொரு பிரிவினர் கோயில் பூஜை உள்ளிட்ட எந்த விசேஷமும் நடத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. பூஜை நடத்துவது தொடர்பாக வருவாய்த்துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அதிகாரிகளின் இந்த முடிவுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மறு உத்தரவு வரும் வரை இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையே பின்பற்றுவதாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, மே 25ம் தேதி மாலையில், அய்யனாரப்பன் கோயில் பூட்டை திறந்து வைத்தார். இதனால் அங்கு பதற்றம் தணிந்து சகஜ நிலை திரும்பி இருக்கிறது. எனினும், முன்னெச்சரிக்கைக்காக காவல்துறை பாதுகாப்பு மட்டும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.