19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3 பெண்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர். அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்கள் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இந்தப் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறையினர் பெண்களிடம் பறிமுதல் செய்ததாகக் கூறி 11 கிலோ கஞ்சாவை மட்டுமே நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
போதைப்பொருள் ஏன் குறைவாக இருக்கிறது என நீதிபதி காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். இது குறித்து எழுத்துப்பூர்வமான கடிதத்தை நீதிமன்றத்தில் காவல்துறையினர் சமர்ப்பித்தனர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. காவல்நிலையம் பழுதடைந்து உள்ளதால் எலி தொல்லை அதிகமாகிவிட்டது. போதைப்பொருள் பொட்டலங்களை எலிகள் கடித்ததில் சிறிது சிறிதாக அதன் அளவு குறைந்துவிட்டது எனக் கூறியிருந்தனர்.
காவல்துறையினரின் இந்தப் பதிலைக் கேட்ட நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி மூன்று பெண்களையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.