சேலத்தில், இரவோடு இரவாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கடையின் விற்பனை ஊழியர் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பெண் ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சேலம் செவ்வாய்பேட்டை நெய்மண்டி அருணாசலம் தெருவில் சேலம் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஆக. 14ம் தேதி இரவு, இந்த ரேஷன் கடை முன்பு, ஒரு லாரி நின்றிருந்தது. இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சந்தேகத்தின் பேரில் அந்த ரேஷன் கடைக்குச் சென்றனர். அப்போது கடையில் இருந்து அரிசி மூட்டைகளை 6 பேர் கும்பல் லாரியில் ஏற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது.
காவல்துறையினரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை கூண்டோடு மடக்கிப் பிடித்தனர். இந்த கும்பல் ஏற்கனவே கொண்டலாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திக்கொண்டு, செவ்வாய்பேட்டை நெய் மண்டி அருணாசலம் தெரு ரேஷன் கடைக்கு வந்துள்ளதும், கடையில் இருந்தே நேரடியாக அரிசி மூட்டைகளை லாரியில் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது.
கடத்தலுக்காக ஏற்றப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியையும், லாரியையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ரேஷன் அரிசி, லாரி ஆகியவற்றுடன் பிடிபட்ட 6 பேரையும் சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை வசம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். லாரி ஓட்டுநர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் (57) என்பதும், உடன் வந்தவர்கள் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சாதிக் பாஷா (53), வாழப்பாடி வடக்கு திருமனுரைச் சேர்ந்த சுப்ரமணியம் (34), சேலம் குகையைச் சேர்ந்த நடேசன் (43), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஷாமால் கோ மைத் (32), பசந்த் மானா (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இரவு ரோந்துக் காவலர்கள் ரேஷன் கடையை நோக்கி வந்தபோது, ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர், அந்தக் கடையின் எடையாளரான பழனிசாமி (54) என்பது தெரியவந்தது. கடையின் விற்பனை ஊழியர் ஜெயந்திமாலாவுக்கும் (45), எடையாளருக்கும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் நெருக்கமான தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பிடிபட்ட அனைவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, ரேஷன் ஊழியர்கள் பழனிசாமி, ஜெயந்திமாலா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்து, சேலம் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண் இயக்குநர் முத்துவிஜயா உத்தரவிட்டார்.
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஜெயந்திமாலா, அருணாசலம் ஆசாரி தெருவில் உள்ள ரேஷன் கடையிலும் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். அந்தக் கடையில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில், அரிசி, சர்க்கரை ஆகியவை இருப்பு குறைவாக உள்ளது. கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 91,200 என்பது தெரியவந்தது.
தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாலேயே அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் ரேஷன் கடையில் இருந்தே நேரடியாக அரிசி கடத்தப்பட்ட சம்பவம் கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.