rameswaram fishermen Sri Lanka Navy incident

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இத்தகைய சூழலில் வழக்கம் போல் நேற்று (31.07.2024) காலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரின் படகு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான கார்த்திகேயன் என்பவரது விசைப் படகு மீது மோதியுள்ளது.

அந்த படகில் இருந்த ராமச்சந்திரன், மூக்கையா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து மாயமாகினர். இதில் படுகாயமடைந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஒரு மீனவர் உயிரிழந்ததாகவும், மற்றொரு மீனவரைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் மாயமான இரு மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், “இலங்கை வசம் உள்ள இரு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். மாயமான ஒரு மீனவரையும் கண்டு பிடிக்க வேண்டும். உயிரிழந்த மீனவரைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்” கோரிக்கை வைத்துள்ளனர்.