Skip to main content

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம்; போராடி மீட்ட கடலோர காவல்படை

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

rameshwaram boat sea gold recovered incident 

 

இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் இந்திய கடலோர காவல் படையினருக்கு கடந்த 30ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மன்னார் வளைகுடா மண்டபம் தென்கடல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத படகு ஒன்று மணாலி தீவு அருகே இருந்ததை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அப்போது படகில் இருந்தவர்கள் ரோந்துப்பணி மேற்கொண்ட அதிகாரிகளை கண்டதும், தப்பிக்க முயன்றதுடன் படகில் இருந்த 2 பார்சல்களை எடுத்து கடலில் வீசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் படகில் இருந்தவர்களை பிடித்தனர்.

 

இதையடுத்து அவர்களை இந்திய கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையை சேர்ந்த 2 பேர், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் என தெரியவந்தது. மேலும் அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய விசாரணை மூலம் கடந்த மே 30ம் தேதி இரவு வேதாளையை சேர்ந்த மேலும் இருவரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அளித்த தகவலின் படி 21 கிலோ 269 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் கடலில் வீசிய பார்சலை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் 3 வது நாளாக நேற்று தீவிரமாக தேடி வந்தனர். கடலுக்கு அடியில் சென்று தேடும் இந்திய கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் மூழ்கி முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என 15 பேர் கொண்ட குழு நவீன சாதனங்களின் உதவியுடன் கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியை மேற்கொண்டனர். கடல் சீற்றத்தால் தேடும் பணி தொய்வடைந்து வந்தது.

 

மேலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து நடந்த தேடும் பணியில் மணாலி தீவு – சிங்கிலி தீவு இடையே கடலுக்கு அடியில் வீசிய பார்சல் மீட்கப்பட்டது. அதில் 11 கிலோ 600 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றியதாக மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 3 நாள் சோதனையில் 20.20 கோடி மதிப்புள்ள 32 கிலோ 869 கிராம் எடை கொண்ட தங்கம் கைப்பற்றப்பட்டதாக  இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்த தங்கக்கட்டிகள் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். படகு மூலமாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.