Skip to main content

9 நாட்களில் 4 பேர் தற்கொலை; இதற்கு தீர்வு என்ன? - ராமதாஸ்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Ramdoss raised a question regarding the online rummy issue

ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று  வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகன் என்ற  இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால்  ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மணிவாசகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான  மணிவாசகன்  சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் நண்பர்கள், சக பணியாளர்கள், உறவினர்கள் போன்றோரிடமும் கடன் வாங்கி  ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் சுமை ரூ.50 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், அதை எப்படி அடைப்பது? என்பது தெரியாமல்தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக  தற்கொலை கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார். மணிவாசகனின் தற்கொலையால் அவரது இளம் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு கொடுமையானது என்பதற்கு  மணிவாசகனின் முடிவு தான் துயரமான எடுத்துக்காட்டு. சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது மட்டுமின்றி, ரூ.50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி சூதாடும் அளவுக்கு மணிவாசகன் துணிந்திருக்கிறார் என்றால் ஆன்லைன் சூதாட்ட போதை ஒரு மனிதனை எந்த அளவுக்கு  ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய கொடூரமான ஆன்லைன் சூதாட்டம் இனியும் தொடருவதை  அரசு அனுமதிக்கக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது அதிகரித்து  விட்டன. கடந்த மே 14-ஆம் தேதி  மாங்காடு சீனிவாசன், 15-ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டை மருத்துவ மாணவர் தனுஷ்குமார், மே 17-ஆம் தேதி திருப்பெரும்புதூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்  இராமையா புகலா, மே 22-ஆம் தேதி  ஓசூரில்  மணிவாசகன்  என  9 நாட்களில்  4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகளின் வேகம் இன்னும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 6  மாதங்களில் மொத்தம் 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்தத் தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த  நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.  

உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடை வாங்க முடியாது. இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?   ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று  வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? ஏதேனும் சிறப்பு வழிகளைக் கண்டறிந்து ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறப்போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள்” - அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
They have stopped power generation Anbumani Ramadoss speech

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்ததனர்.  இந்நிலையில் மின்கட்டன உயர்வை திரும்ப பெற கோரி பாமக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இன்று (19.07.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக  கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “அரசு துறையில் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால் 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உச்சத்தில் இருக்கும் போது அரசு சார்பில் செல்லக்கூடிய மின்சாரம் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான். 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவையில் வெறும் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான் தமிழக அரசு உற்பத்தி செய்கிறது.

மீதம் உள்ள 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான காரணம் என்னவென்றால் காசு, பணம், துட்டு, மணி, மணி. அரசுத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் சராசரியாக 3.40 ரூபாய் தேவைப்படும். ஆனால் உச்சப்பட்ச மின் தேவை உள்ள நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

'சரண்டர் ஆன ஒருவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும்?' - அன்புமணி கேள்வி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 'Why should a surrendered man run away; CBI should investigate'-Anbumani interview

'சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை விலங்கு இல்லை என்றால் என்ன காரணம்?' என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஒன்று. ஆனால் அரசு செய்வது ஒன்று. காவிரி தண்ணீர் பிரச்சனையை சரியான முறையில் தமிழக அரசு கையாளவில்லை. பிரச்சனை வரும் நேரத்தில் அப்பொழுதுதான் ஒரு கூட்டம் நடத்துவார்கள். நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்கள். உச்சநீதிமன்றம் செல்வோம் என்று சொன்னார்கள். ஆனாலும் இயற்கை நமக்கு அங்கே கர்நாடகாவில் மழையை கொடுத்ததால் இன்று நாம் கேட்ட தண்ணீரை விட மூன்று மடங்கு அதிக தண்ணீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆறு மாதம் இதைப் பற்றி நாம் பேசப்போவது கிடையாது. அதற்கு பிறகு இந்த பிரச்சனை மீண்டும் வரும் பொழுது அனைத்து கட்சிக் கூட்டம் போடுவோம், உச்சநீதிமன்றம் போவோம். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுதான் என்ன?

அடுத்தது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம். இந்த சட்டத்தை ரத்து செய்த பிறகு கிட்டத்தட்ட 30 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். அதை பற்றி திமுக அரசுக்கு கவலையே கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறுவதற்கு கூட திமுகவிற்கு மனசு கிடையாது. அவர்களுக்கு எல்லாமே வியாபாரம் வணிகம் தான். இதையெல்லாம் திமுக மக்களுக்கு செய்யும் துரோகங்கள். தமிழ்நாட்டினுடைய சட்ட ஒழுங்கு தினமும் ஒரு கொலை என்பதாக இருக்கிறது. மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்துள்ளார்கள். பாமகவின் நிர்வாகி வெட்டி கொலை, அதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங், அதற்கு முன்பு அதிமுக, அதற்கு முன்பு காங்கிரஸ் நிர்வாகி என ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு கொலை நடக்கிறது என்பதால் மக்கள் எல்லாம் அச்சத்தில் பயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அது ஒரு பக்கம், அடுத்தப்பக்கம் கள்ளச்சாராயம் ஆறாக பெருகிக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் 11 பேர் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறார். மரக்காணம் சம்பவத்தின் போது இரும்புக் கரம் கொண்டு  வேரோடு அறுப்போம் என வசனம் பேசினார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் அதே வசனம் பேசினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை என்கவுன்டரில் போட்டுள்ளார்கள். சரண்டர் ஆன பிறகு சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை  விலங்கு இல்லை என்றால் என்ன காரணம். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம். சிபிஐ விசாரணை வந்தால் தான் முழு உண்மை வெளியே வரும். ஏன் என்கவுன்டர் செய்தார்கள்; இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது வெளிவரும்'' என்றார்.