நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தெரிவிக்கையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு ஆகும். எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விபரங்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி என்ற அறிவிப்பை நாளை (19.03.2024) காலை செய்தியாளர் சந்திப்பின் போது ராமதாஸ் அறிவிக்க உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க.வுக்கு தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நாளை (19.03.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.