Skip to main content

மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டர் 15 ரூபாய்!  - விடுதலைக்குப் பின்  ராமர் பிள்ளை பேட்டி!      

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

Ramar Pillai has informed that herbal petrol will be sold at Rs 15 per litre

 

போலி பெட்ரோல் மோசடி வழக்கிலிருந்து விடுதலையான ராமர் பிள்ளை ராஜபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முதலில் அவருடைய சட்ட ஆலோசகர் சொக்குசாமி பாலசுப்பிரமணியம் பேசினார்.

 

“ராமர் பிள்ளை கண்டுபிடித்தது மூலிகை பெட்ரோல் கிடையாது. போலியாக வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரித்தார் என்று கடந்த 2000ல் சிபிஐ  மூலம் மோசடி வழக்கு பதிவாகி, 2016ல் சென்னை எழும்பூர் நீதிமன்றம், ராமர் பிள்ளைக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து, கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில்  ராமர் பிள்ளை மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின்  தீர்ப்பு மூலம் ராமர் பிள்ளை விடுதலை செய்யப்பட்டார்.” என்றார்.     

 

இதனைத் தொடர்ந்து ராமர் பிள்ளை “1999ல் மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்தேன். முறையான அனுமதி பெற்று ஆலை தொடங்கினோம். மூலிகை பெட்ரோல் தயாரித்து ஒவ்வொரு லிட்டருக்கும் அரசுக்கு வரி செலுத்தி மூலிகை பெட்ரோலை விற்றோம். இந்த நிலையில்தான், அது  போலி பெட்ரோல் என்று வழக்கு தொடரப்பட்டது. முதன் முதலில்  ராஜபாளையத்தில்தான் மூலிகை பெட்ரோலைத் தயாரித்து வெளியிட்டேன். இப்போது என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொய்யென்று நிரூபித்துவிட்டேன். விரைவிலேயே விருதுநகர் மாவட்டத்தில் பெரிய  அளவில் மூலிகை எரிபொருள் உற்பத்தி ஆலை தொடங்கப்படும். அந்த ஆலையில் மூலிகை எரிபொருள் உற்பத்தி நடக்கும். மூலிகை பெட்ரோலை குறைந்த விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15-க்கு வழங்குவோம். அது புகையில்லாத எரிபொருளாகவும் இருக்கும். இந்தக் கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள் முன்பாக நிரூபித்திருக்கிறேன். புதிய ஆலை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன்வந்திருக்கிறார்கள். விரைவிலேயே புதிய ஆலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவோம். என்னுடைய கண்டுபிடிப்புக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை.” எனப் பேட்டியளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்