இராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். அவரது மனைவி செல்வி. இவர் கோட்டையேந்தல் கிராமத்தில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது தன்னுடைய மணிபர்ஸ்ஸில் 10 பவுன் நகை, ரொக்கம் 1000 ரூபாய் மற்றும் கல்வி சான்றிதழ்கள் வரும் வழியில் எங்கோ தவறி விழுந்துவிட்டது.


இதையடுத்து கண்ணீருடன் சென்ற செல்வி சிக்கல் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜிடம் புகார் அளித்த சிறிது நேரத்தில், சிக்கல் வடக்குதெரு பகுதியைச் சேர்ந்த நாகவேல் என்பவரது மகள் சந்தனமாரி கீழே கிடந்த பர்ஸ் எடுத்து கொண்டு காவல்நிலையம் சென்று ஒப்படைத்தார்.
மாற்றுத்திறனாளியான சந்தனமாரிக்கு காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் பொறுப்புடன் செயல்பட்டதற்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை செய்து கண்ணீருடன் வந்தபெண்ணிடம் அவரது பர்ஸ், பணம், சான்றிதழ்கள் ஒப்படைக்கப்பட்டது. சந்தனமாரிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார் செல்வி.
இதுபற்றி கீழக்கரை டிஎஸ்பி முருகேசனுக்கு தகவல் தெரியவர அவர் மாற்றுத்திறனாளி பெண்ணான சந்தனமாரிக்கு அவருடைய நேர்மையைப் பாராட்டி அவருக்கு மின்விசிறி, 25 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். அவருடன் சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அனிதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜ் உடன் சென்றனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சந்தனமாரியின் நேர்மையைப் பாராட்டி வருகின்றனர்.