Skip to main content

“அரசு கலைக் கல்லூரிகளில் நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Ramadoss insists Permanent principals should be appointed in government arts colleges

முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரமும் குறைகிறது. அரசு கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

முதல்வர்கள் இல்லாமல் அரசு கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். அதனால், முதல்வர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய முதல்வர்களை தேர்வு செய்து நியமிக்க முடியும். அதை செய்ய அரசு தயங்குவது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதமோ, இரு மாதங்களோ காலியாக கிடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக காலியாகக் கிடக்கின்றன என்பது தான் கவலையளிக்கும் உண்மையாகும். 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இப்போது காலியிடங்களின் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாகி விட்டது. மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால், மே மாதத்திற்கு முன்பாகவே முதல்வர் பணியிடங்களை அரசு நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், நிலையான முதல்வர்களை நியமிப்பதற்கு மாறாக பொறுப்பு முதல்வர்களை மட்டுமே நியமித்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த தமிழக அரசு முயல்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும்.

நிலையான முதல்வர்களுக்கு மாற்றாக பொறுப்பு முதல்வர்களைக் கொண்டு கல்லூரியை நடத்துவதால், கல்லூரியின் கல்வி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க அரசுக்கும் கூடுதல் செலவு ஆகிறது. தமிழக அரசு 2022-ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையின்படி, ஒரு கல்லூரியில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் மூத்த இணைப் பேராசிரியர் ஒருவரை பொறுப்பு முதல்வராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு அவரது மொத்த ஊதியத்தில் 20% அல்லது முதல்வர் பணிக்கான ஊதியத்தில் 50%, இவற்றில் எது குறைவோ அதை கூடுதல் ஊதியமாக வழங்க வேண்டும். அதன் மூலம் பொறுப்பு முதல்வருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இது நிலையான முதல்வருக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட அதிகம் ஆகும். கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதையும், கல்லூரிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமக தலைவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
DMK MLAs notice to PMK leaders!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். 

DMK MLAs notice to PMK leaders

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா?.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக உதயசூரியன் எம்எல்ஏ பேசுகையில், “கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர். 37 ஆண்டுக்கால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். 

DMK MLAs notice to PMK leaders

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களை இருவரும் தொடர்புப்படுத்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டிஸில், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் வைத்த குற்றச்சாட்டைத் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அந்த நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தும் வகையில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விழுப்புரத்திலும் விஷ கள்ளச்சாராய விற்பனையா? - பாமக நிறுவனர் ராமதாஸ்  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
ramadoss question illicit Liquor sale in Villupuram too?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்த நிலையில் நேற்று சென்னை சேர்ந்த ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து ராயாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது. நச்சு சாராயம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற சுமை தூக்கும் தொழிலாளி சென்னையிலிருந்து  சரக்குந்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு கடந்த 17-ஆம் தேதி விழுப்புரம் சென்றுள்ளார். அங்கு சரக்கு இறக்கி முடித்த பிறகு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த அவர் இரு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

வீட்டில் வைத்து அந்த கள்ள சாராய பாக்கெட்டுகளை 20-ஆம் தேதி குடித்த கிருஷ்ணசாமி கடுமையான வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் பின்னர் இராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி விட்டாலும் கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்த கூலி தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு ஏற்பட்ட பாதிப்பு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலும் நச்சு சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதா? அல்லது கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தை எவரேனும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு கொடுத்தார்களா என்ற வினா எழுகிறது. இதற்கு விடை காணப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய நச்சு சாராயம் விற்கப்படுவதைத் தான் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. கள்ள சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பது ஒருபுறமிருக்க, விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதனால் எவரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எவருக்கேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.