Skip to main content

இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? - அன்புமணி

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
Ramadoss has questioned justice for Israel, a justice for Sri Lanka in the war crimes trial?

போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் 35 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குக் காரணமான  இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, விசாரணைகள் தொடங்கியுள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் இதே நீதி  ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படாதது ஏன்? என்ற வினாவும் எழுந்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி, பன்னாட்டு மனித உரிமைகள் சட்டமும், பன்னாட்டு மனிதாபிமான சட்டமும் மீறப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவற்றின் அடிப்படையில், ஐ.நா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஹாலந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் (International Court of Justice - ICJ) இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது இனப்படுகொலை வழக்கை தென்னாப்பிரிக்க அரசு அண்மையில் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய அட்டூழியக் குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளும் பன்னாட்டு நீதிமன்றங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் உச்சமாகப் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், போருக்குக் காரணமான ஹமாஸ் அமைப்பின் மூன்று தலைவர்கள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கான பிடி ஆணையை தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court - ICC) வெளியிட வேண்டும் என்று அந்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் கரீம்கான் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் இலங்கையின் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை  செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் மனித உரிமை பேசும் நாடுகள்  கடந்த 15 ஆண்டுகளாக எந்த நடவடிக்கை வேடிக்கைப பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. பொதுவெளியில் முன்வைக்க விரும்பும் வினாவாகும். ஆனால், அதற்கு பதில் தான் இல்லை.

இத்தனைக்கும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞரும், அந்த நீதிமன்றம் அமைத்த பன்னாட்டுச் சட்ட வல்லுநர்கள் குழுவும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், தெரிவிக்கப்பட்ட  கருத்துகளை ஆய்வு செய்தால், போர்க்குற்றங்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இலங்கைக்கு எதிராகவும் எடுக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.       ‘‘உலகின் முக்கியமான பிரச்சினை ஒன்றில் நாம் தெளிவான முடிவை எடுப்போம். பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்துவதற்கான நமது விருப்பத்தை நாம் வெளிப்படுத்தவில்லை என்றால், சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் (சில நாடுகளுக்கு எதிராக) மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்ற எண்ணம் உருவானால், அந்தச் சட்டம் நிலைகுலைவதற்கான சூழல்களை நாமே உருவாக்குகிறோம். பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் அனைத்து  தனி நபர்களுக்கும் பொருந்தும், அனைவருக்கும் சமமாகப் பொருந்தும்’’ என்று வழக்கறிஞர் கரீம் கான் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, அந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞருக்கு அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில்,‘‘பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தின் பிடியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடிய தகுதி எந்த போருக்கும் கிடையாது. எந்தக் குழந்தையின் உயிரையும் இன்னொரு குழந்தையின் உயிரை விடக் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் பயன்படுத்தும் சட்டம் மனிதக்குலத்தின் சட்டம், அது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கான சட்டம் அல்ல. போரில் பாதிக்கப்படும் அனைவரையும் அது பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற  வழக்கறிஞர் மற்றும் வல்லுநர் குழு தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு எதிராக  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் இலங்கைக்கு எதிராகவும் எடுக்கப்பட வேண்டும். அது தான் நீதி.

ஆனால், இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது, போருக்குப் பிறகு தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது போன்ற போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ள போதிலும் இலங்கைக்கு எதிராக இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் 15 ஆண்டுகளாக சுதந்திரமாக நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களும், ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Human Rights - OHCHR) 17.05.2024 அன்று வெளியிட்ட அறிக்கையானது போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் கடமையை இலங்கை சரியாக செய்யவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால், இலங்கை செய்யத் தவறியதை உலக நாடுகள் தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் கடமை உலக நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தியாவுக்கு உள்ளது.  இலங்கை சிக்கலில், இந்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ள நிலைப்பாடு மாறினால் ஈழத்தமிழருக்கு இனியாவது நீதி கிடைக்கும்.

எனவே, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இப்போதும் தொடர்வது ஆகியவற்றுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காவிட்டால் இலங்கையுடனான  உறவை முறித்துக் கொள்வதாக  இந்தியா எச்சரிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் தந்தை நாடான இந்தியா, அதன் தூதரக வலிமையை முழுமையாகப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்