சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாரயணராவ் மகா யாகம் செய்தார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற யாகத்தில் சத்தியநாரயணராவ் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள், நடிகர் ரஜினிகாந்தின் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

மகா யாகத்தில் 100 சுமங்கலி பெண்களுக்கு துணிமணிகள் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டையில் உள்ள பாபா பிறந்த இடத்தில் 250 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா தமிழ்நாட்டில் அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். தமிழ்நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் எனது சகோதரர் நீடுடி வாழ வேண்டும் என்று மகா யாகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 2021 ஆம் ஆண்டில் ரஜினி முதல்வராக வேண்டும் என்று சிறப்பு யாகம் செய்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படி ஒன்றும் இல்லை என்றார்.

எனது தம்பி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மன்றம் போட்டியிடாது. அப்படியே போட்டியிடுவது குறித்து ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க கர்நாடக முதல்வரை சந்தித்து தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவுப்படி கொடுக்கவேண்டிய தண்ணீரை கொடுக்க வலியுறுத்துவீர்களா? என்றதற்கு கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை என்றார். தமிழகத்தில் மழை பொழியவே யாகம் செய்துள்ளோம் என்று மழுப்பினார். இதில் சிதம்பரம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.