அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சில நிர்வாகிகள் ரசிகர் மன்றத்திலிருந்து விலகினர்.
அதன் தொடர்ச்சியாக, ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள் பலர் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்தனர். திமுக வடசென்னை தொண்டரணி துணைச் செயலர் லட்சுமி வேலுவைச் சந்தித்த இவர்கள், தாங்கள் திமுகவில் இணைந்துகொள்வதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த தொழிலதிபர் ஏ.வி.கே.ராஜா, மேலும் சில மாவட்டச் செயலாளர்கள், மக்கள் மன்றத்தின் மகளிரணியைச் சேர்ந்த 7 நிர்வாகிகள் என மொத்தம் 14 பேர் இன்று (26/07/2021) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.