அண்மையில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகி, விரக்தியடைந்த விஜயகுமார் என்பவர் தன் மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் உருக்கமான ஆடியோ பதிவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமதி மூ.ராஜேஸ்வரி பிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் விஜயகுமார் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. முப்பது லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்து மன அழுத்தத்தின் உச்ச நிலைக்கு சென்று தவறான முடிவை எடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் தவிக்கவிட்டு அவர் எடுத்த முடிவு மிகவும் மோசமானதாகும். இதற்கு காரணமாக இருந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை நிச்சயமாக மத்திய மாநில அரசுகள் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.
இன்று பல பெயர்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகமாகி வருகின்றன. விஜயகுமாரின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். உடனடியாக, அரசு அனைத்து விதமான, ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் மன விரக்தியிலும், அடிமையாகவும் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதனை தயவுசெய்து எல்லோரும் உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.