தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாதத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கமும் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்தது. குறிப்பாக கரோனா சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் வெகுவாக குறையத் துவங்கியதும் அரசு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த முழு ஊரடங்கில் முதல்முறை தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டபோது டாஸ்மாக் இயங்க தமிழ்நாடு அரசு தடை வித்திருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. ஆனால், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது டாஸ்மாக் இயங்க அரசு அனுமதி வழங்கியது மட்டுமின்றி காலை 10 மணிக்கு திறக்கவும் உத்தரவிட்டது. இது பொதுமக்கள் மத்தியிலும், பல அரசியல் கட்சியினர் மத்தியிலும் விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது.
இந்நிலையில் அனைத்து மக்கள் அரசு கட்சி நிறுவனத் தலைவர் மூ. ராஜேஸ்வரி பிரியா, டாஸ்மாக் திறப்பிற்கும் காலை 10 மணிக்கே திறப்பதற்கும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது விலக்கினை படிப்படியாக கொண்டு வரமாட்டீர்கள் என்பது நாங்கள் அறிந்ததே. ஆனால், மதுவை வளர்த்தெடுக்க தங்களது ஆட்சியில் மதியம் 12 மணிக்குத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளைக் காலை 10 மணிக்குத் திறக்க தாங்கள் எடுத்த முடிவு தவறானது. மது குடிப்போரின் வேலைக்கு போகும் எண்ணத்தை மாற்றும் வகையில் காலை 10 மணிக்கே கடைகளை திறப்பது மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும். 10 மணிக்கு திறக்க அது என்ன அரசு அலுவலகமா?
மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் அரசுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பது மக்களுக்கு செய்யும் துரோகம். குறிப்பாக மதுவினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எத்தனையோ குடும்பங்கள் அழிந்துவருகின்றன.
கனிமொழி அவர்கள் சென்ற ஆட்சியில் மதுவிலக்கு பற்றியெல்லாம் பேசினார்கள். தற்போது எங்கே சென்றார்?
அடுத்த தலைமுறையினரையாவது மதுவுக்கு அடிமையாகவிடாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். மதுவின் தீமை பற்றி விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கப்படாதது போன்ற நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை இன்றுவரை டாஸ்மாக் நிர்வாகம் மதிக்கவில்லை என்பது வேதனை” என்று தெரிவித்துள்ளார்.