இன்று (6-ஆம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், ஒருநாள் முன்னதாக 5-ஆம் தேதி, கர்நாடகா – ஹாசன் பகுதியில் ராஜேந்திரபாலாஜி கைதானார். மேலும், அவருக்கு அடைக்கலம் அளித்த ராமகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜிக்கு காரோட்டிய உதவியாளர் நாகேஷ், ஓசூர் ந.செ. ரமேஷ் மற்றும் விருதுநகர் மாவட்ட ஐ.டி. பிரிவு தலைவர் பாண்டியராஜன் ஆகிய நால்வரும் பிடிபட்டனர். அங்கிருந்து 6-ஆம் தேதி நள்ளிரவு கடந்து 1-15 மணிக்கு விருதுநகர் கொண்டுவரப்பட்டு, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திரபாலாஜி விசாரிக்கப்பட்டார். அவர் கார் டிக்கியில் வைத்திருந்த 500 ரூபாய், 2000 ரூபாய் கரன்ஸிக் கட்டுகள் மற்றும் உடமைகள் கணக்கிடப்பட்டன. விசாரணைக்குப் பிறகு, அதிகாலை 4-20 மணிக்கு ராஜேந்திரபாலாஜி மட்டும் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ட்ரெங்த் காட்டவிடாமல் கைது நடவடிக்கை!
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திரபாலாஜியைக் கைது செய்ததால், விருதுநகர் மாவட்ட அதிமுகவினரால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடாது என்பது காவல்துறையினருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், கைதான ராஜேந்திரபாலாஜி கண்முன்னே, அவரை ஆதரித்து வாழ்த்து கோஷமும், ஆட்சிக்கு எதிரான ஒழிக கோஷமும் அதிமுகவினர் யாரும் எழுப்பிவிடக்கூடாதெனக் கறாராகச் செயல்பட்டனர். ஆனாலும், ‘மாவீரன் கே.டி.ஆர். வாழ்க!’ என, ராஜேந்திரபாலாஜி விருதுநகருக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன் சிலர் கோஷமிட்டதை, விருதுநகரில் கேட்க முடிந்தது.
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு ராஜேந்திரபாலாஜியைக் கொண்டுவரும்போதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதும், ஒரு ஸ்ட்ரெங்த் காட்டிவிட வேண்டுமென்று, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதையறிந்த காவல்துறையினர், விருதுநகர் மாவட்ட எல்லைகளிலேயே அதிமுகவினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். ஆனாலும், காவல்துறையின் கண்ணில் படாமல் வேறு ரூட்டில் வந்து, விருதுநகரிலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அதிமுக நிர்வாகிகள் சிலர் திரண்டனர். ‘இங்கே கூட்டம் போடக்கூடாது; கலைந்து போகவில்லையென்றால் கைது செய்வோம்..’ என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்க, “இது ஜனநாயக நாடுதானே! பொய் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகத்தானே ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்? 20 நாட்கள் கழித்து எங்கள் மாவட்ட செயலாளரின் முகத்தை நேரில் பார்க்கக்கூட விடமாட்டோம் என்று சொல்வது சர்வாதிகாரமாக இருக்கிறது.” என்று ராஜவர்மன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரோடு சேர்த்து 66 பேர் கைது செய்யப்பட்டு, சூலக்கரை மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன்பாகக் கூடிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
ஒருவழியாக ராஜேந்திரபாலாஜியின் 20 நாள் ஓட்டம், காவல்துறையின் தேடுதல் வேட்டையால் முடிவுக்கு வந்துள்ளது.