
மழைக்காலம் துவங்கி விட்டது. இரவு நேரங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு விரைந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருக்கிறார் தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத்.
அந்த கடிதத்தில், "மழைக்காலம் மக்களுக்கும் அரசுக்கும் சோதனை காலமாக மாறாமல் இருக்க சாலைகள் அதற்குரிய தரத்துடன் சீரமைக்கப்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும். செப்டம்பர் 19-ம் தேதி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர், புறநகர் பகுதிகள், பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் சாலை செப்பனிடும் பணிகளை முதலமைச்சர் கடந்த 21-ம் தேதி நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் சேதமடைந்த சாலைகள் ஓரிரு இடங்களில் மட்டுமே சீரமைக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கியமான சாலைகளிலேயே ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நேர்கின்றன.
முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட, சென்னை மாநகர் முழுவதும், குறிப்பாக வட சென்னையில் சாலைகள், மற்ற பகுதிகளைவிட மோசமாக உள்ளது. மத்திய சென்னையையும், வட சென்னையையும் இணைக்கும் முக்கிய சாலையான பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்டவை மோசமாக உள்ளன. அதற்கு ரயில்வே மேம்பாலம், மெட்ரோ ரயில் பணிகளை காரணமாக சொல்கிறார்கள்.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் வெள்ளநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து தற்போது புதிய "தார்" சாலைகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள்ள சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு, உரிய முறையில் தார்க்கலவை, ஜல்லி கற்கள் பயன்படுத்தப்பட்டு போடப்பட வேண்டும். ஆனால், அப்படி முறையாக சாலைகள் அமைக்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தத்தில் உள்ளபடி, "தார்"சாலை அமைக்கும் விதம் குறித்து இடம்பெற்றுள்ள வரைமுறைகளின் படி சரியான அகலம், உயரம், பார் கலவை தார்க்கலவை, பெரிய ஜல்லி கற்கள் மற்றும் சிப்ஸ் என்று சொல்லக்கூடிய சிறிய ஜல்லி கற்கள் என அனைத்து வகையிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி முறையான விகிதத்தில் கலக்காமல் சென்னை மாநகராட்சி பொறியாளர்களின் நேரடி மேற்பார்வை இல்லாமல், சாலைகளின் ஒப்பந்ததாரர்கள் நேரடியாக சாலை போடாமல், சப் காண்ட்ராக்டர் முறைகளில் ஒப்படைத்து விடுவதால் சாலை போடும் நிறுவனங்களின் சூப்பர்வைசர்கள் சாலைகள் குறித்த தரம் அறிந்த வல்லுநர்களாக இல்லாமல், சாலை அமைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் இல்லாத தகுதியற்றவர்களை கொண்டு, சாலைகள் அமைக்கப்படுவதால் முதலமைச்சர் தொகுதியிலேயே மோசமான முறையில் சாலைகள் போடப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு இடத்தில் குறிப்பாக திருவிக நகர் பகுதியில், திரு.வி க.நகர் பல்லவன் சாலை, சத்யநாராயண தெரு, அன்பு நகர் போன்ற இடங்களில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சாலைகள் தரம் குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான இடங்களில் பெயரளவுக்கே சாலைகள் சீரமைக்கப்படுகின்றன என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
எனவே, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்ய வேண்டும். ஏனெனில் கொளத்தூர் உட்பட வட சென்னையின் பல்வேறு பகுதிகள், மழைநீர் வீடுகளுக்குள் புகும் பகுதியாக உள்ளன.
இதற்கு சாலைகளின் உயரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதே காரணம். பழைய, சேதமடைந்த சாலைகளை அகற்றாமல், அதன் மீதே புதிய சாலைகள் அமைப்பதால், சாலைகள் அமைப்பதால், 10, 15 ஆண்டுகள் பழமையான வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுகின்றன. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இதை முதலமைச்சர் நேரடியாகவே பார்த்தார்.
எனவே, சாலைகள் அதற்குரிய தரத்துடன் முறையாக சீரமைக்கப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும். சென்னை முழுவதும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்து தற்போது தீவிரமாக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீவிரமாக வேகமாக தரமற்ற சாலைகளை அமைப்பதை விட, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில் தரமுள்ள சாலைகள் அமைப்பதை உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்பது அனைத்து மக்களின் கருத்து மற்றும் வேண்டுகோள். இல்லையெனில் வரும் மழைக்காலம் மக்களுக்கு மட்டுமல்ல, திமுக அரசுக்கும் சோதனை காலமாகி விடும்" என்று குறிப்பிட்டுள்ளார் ஏ.என்.எஸ்.பிரசாத்.