Skip to main content

நண்பர்கள், உதவியாளர்களுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களிலும் தொடரும் ரெய்டு! (படங்கள்)

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொண்டனர். அதேபோல் மீண்டும் இன்று (22.10.2021) காலை முதலே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய நான்கு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது.

 

சென்னை நந்தனம் எக்ஸ்டென்ஷன் 11வது தெரு, வெங்கடேஸ்வரா மருத்துவமனை பின்புறம் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடக்கிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் என்பவருக்கு சொந்தமான சாசன் டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளரான முருகனின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கருத்துக் கணிப்புகளை எல்லாம் தாண்டி பலமுறை அதிமுக வென்றுள்ளது” - விஜயபாஸ்கர்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
 AIADMK has won multiple polls says Vijayabaskar

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (4ம்தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு,  திருச்சி மக்களவை தொகுதிக்கான அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர்கள் சீனிவாசன், குமார், பரஞ்ஜோதி, அதிமுக வேட்பாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமை வகித்து முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய விஜயபாஸ்கர், “பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கருத்து திணிப்புகள். பலமுறை இதுபோன்ற கருத்துக்கணிப்புகளையெல்லாம் தாண்டி அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதனால், முகவர்கள் கருத்துக் கணிப்பு குறித்துக் கவலைப்படாமல், ஓட்டு எண்ணிக்கைக்கு மகிழ்ச்சியாகவும், தெம்பாகவும் செல்ல வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணிக்கு அதிமுகவின் 534 ஏஜென்ட்டுகளும், கம்பீராக ஜமால் முகமது கல்லூரிக்குள் நுழைய வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முகவர் பணியே மிகவும் கவுரமான, அங்கீகாரமான பணியாகும். அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கருத்தை ஓங்கி ஒலிக்க வேண்டும். ஆட்சேபனை இருந்தால் அழுத்தமாகக் கூற வேண்டும். எந்த முகவரும் ஆட்சேபனை சொல்லிவிட்டால் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். அதனைச் சரியாகக் கண்காணிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் 6 தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது அவை குறித்துப் பல தகவல்கள், கருத்துகள் வரும். அவற்றைக் காதில் வாங்காமல் அவரவர் அறை ஓட்டு எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முகவர்கள் கடைசி வரை அனைத்து சுற்றுகளும் முடிவடையும் வரையில் அறையில் இருக்க வேண்டும். சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கையை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக பதிவேட்டில் பதிவிட வேண்டும். திருச்சி தொகுதியில் நாம் கடுமையான பணியாற்றி இருக்கிறோம். அதனால் வெற்றி பெறுவதில் உறுதியாக உள்ளோம். அனைத்து சுற்றுகளும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால், அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்தச்சூழலாக இருந்தாலும், கடைசி வரை இருந்து போராடி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற செய்தியைப் பொதுச்செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்..

எல்லா கருத்துக்கும் விடை 4-ஆம் தேதிதான் கிடைக்கும். அதுவரை எந்தப்பேச்சைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.  எந்தப்பிரச்சனையாக இருந்தாலும், உங்களுக்காக குரல் கொடுக்க அனைத்து நிர்வாகிகளும் வெளியில்தான் இருப்போம். ஓட்டு எண்ணிக்கை முகவர்கள்தான் வெற்றி செய்தியை எங்களுக்கு முதலில் தர வேண்டும். கருத்துக் கணிப்புகளைத் தாண்டி திருச்சி உட்பட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்’’ என்றார்.

கூட்டத்தில், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, தலைமை முகவர் சின்னதுரை, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story

குட்கா வழக்கு; சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை! 

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
Former Ministers Vijayabaskar PVRamana case Recommendation to transfer to a special court!

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி, மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (29.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் கூடுதல் சிறப்பு நீதிமன்றம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேடு வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.