தெரு நாய்களுக்கு வெறி நோய் ஏற்பட்டு மனிதர்களையும் கால்நடைகளையும் கடித்துக் குதறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு நாய்களின் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வெறிநோய் போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். ஆனால் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நாய்களுக்கு எந்தவித பராமரிப்புகளும் இல்லாததால் வெறி நோய்கள் ஏற்பட்டு மனிதர்களையும் கால்நடைகளையும் கடித்து வருகிறது.
இந்நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெரு நாய்களுக்கு வெறி நோய் இல்லாத மாவட்டமாக்கும் முயற்சியில் இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் சுமார் 1000 தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடும் பணியை செய்ய உள்ளது. இதன் முதல்கட்டமாக புதுக்கோட்டை மாநராட்சி ஊழியர்கள் உதவியுடன், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர் மருத்துவர் சொக்கலிங்கம் குழு அமைத்து சாந்தநாதபுரம், சார்லஸ் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த சுமார் 25 தெருநாய்களை வலை மூலம் பிடித்து வெறி நோய் தடுப்பூசி செலுத்தி அந்த நாய்களுக்கு அடையாளம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் இயக்குநர் தலைவர் வீர.சரத்பவார் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஸ்வரி, ஓவியா, கீரை தமிழ் அசோகன், மற்றும் விலங்குகள் நல ஆர்வலர் அர்சத் அகமது ஆகியோர் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக 25 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. விரைவில் சுமார் 1000 தெருநாய்களுக்கு தடுப்பூசிகள் போட மருந்துகள் தயாராக உள்ளதாக பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் இயக்குநர் தலைவர் வீர.சரத்பவார் கூறினார்.