புதுமை பெண் திட்டம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(05.09.2022) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற "புதுமைப் பெண்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் இத்திட்டத்திற்காக மாநில அளவில் ரூ.698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 6,00,000 அரசு பள்ளிகளில் படித்த இளங்கலை பட்டம் மற்றும் தொழிற் பயிற்சி பயிலும் மாணவிகள் பயன்பெறுவார்கள். இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகுதியுடைய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவிகள் 6500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், முதற்கட்டமாக 613 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- பெறுவதற்கு பற்று அட்டைகள் (Debit card) வழங்கப்பட்டது. இதில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 477, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 83, சட்டக் கல்லூரி மாணவர்கள் 10, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 23 மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள் 20 நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களையும் சில முன்னுதாரணங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் "புதுமைப் பெண்" என்ற கையேடு வழங்கப்படுகிறது. எங்கெல்லாம் பெண்கள் கல்வி அறிவு மற்றும் நிதி குறித்த விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான குடும்பங்கள் அமையும். இத்தகைய, வலுவான தேசம் அமைய வழிவகைச் செய்கின்றன. அதற்காக "நிதி விழிப்புணர்வுக் கையேடு"வழங்கப்பட்டது.