தமிழ்நாடு முழுவதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் தேர்தலுக்காக எதிரெதிர் முகாம்களில் பணியாற்றி வரும் நிலையில், ஒரே ஒரு ஒன்றியத்தில் மட்டும் ஆளுங்கட்சியே தி.மு.க வுக்கு ஆதரவு நிலை எடுக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் தான் இந்த விநோதம் நடக்கிறது. கடந்த வாரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த போது 14 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன், தி.மு.க வேட்பாளர் பரணி கார்த்திகேயனுக்கு ஆதரவாக தனது வேட்பு மனுவை வாபஸ் பெற மனு கொடுக்க முயன்ற போது, அ.தி.மு.க ஒ.செ. துரைமாணிக்கத்தால் அந்த மனு கிழித்து வீசப்பட்டது. அப்போது மேஜை, நாற்காலிகளும் உடைக்கப்பட்டு பிரச்சனை பெரிதானது. அடுத்த இரண்டாவது நாளில் அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் தி.மு.க வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்காக தி.மு.க வேட்பாளர்கள் தான் வாபஸ் பெற்றனர். இது ஒரு பக்கம் என்றால் அதே மணமேல்குடி ஒன்றியத்தில் 10 வது வார்டில் (நெற்குப்பம், கோலேந்திரம், மின்னாமொழி கிராமங்கள் ) போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுமதி பெரியகருப்பனுக்கு ஆதரவாக அறந்தாங்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரெத்தினசபாபதியின் மகன் ஏகாம்பர ஈஸ்வர் வீடு வீடாக் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பரணி கார்த்திகேயன் அண்ணன் தான் எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி, எல்லாரும் அ.ம.மு.க வில் இருந்தாங்க. அப்பறம், எம்.எல்.ஏ அ.தி.மு.க போனார், கார்த்திகேயன் தி.மு.க போனார். இவர்களின் சகோதரர் தான் பெரியகருப்பன். இவர் மனைவி சுமதி தான் 10 வது வார்டு உறுப்பினர் பதவிக்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஏகம்பரஈஸ்வர் வாக்கு சேகரித்து வருகிறார். கட்சிகளை கடந்து சின்னம்மாவுக்காக ஓட்டுக் கேட்கிறார். இதில் என்ன தப்பு என்கிறார்கள் உ.பி.க்கள். இந்த ஒன்றியத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல் வரை இன்னும் பல விநோதங்கள் நிகழும் வேடிக்கை மட்டும் பாருங்க என்று சிரிக்கிறார்கள் ஏரியா மக்கள்.